Ontario, Quebec மற்றும் British Columbia மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த பல மின்சார வாகன மற்றும் battery உற்பத்தித் திட்டங்கள் தாமதிக்கப்பட்டுள்ளதுடன், சில திட்டங்கள் இரத்து செய்யப்பட்டும், இடைநிறுத்தப்பட்டும் உள்ளன.
இந்நிலையில், Ontarioவின் St. Thomas பகுதியில் Volkswagen நிறுவனத்தின் PowerCo battery ஆலை திட்டமும் இரண்டு ஆண்டுகள் தாமதிக்கப்பட்டுள்ளது.
அங்கு battery உற்பத்தி ஆரம்பிக்கப்படவிருந்த காலம் தற்போது 2029ஆம் ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. சந்தைத் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மின்சார வாகன சந்தையின் வளர்ச்சி வேகத்தை கனடா அரசாங்கம் அதிகமாக மதிப்பிட்டுவிட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட PowerCo திட்டம் முழுமையாக செயல்படும்போது, ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் மின்சார வாகனங்களுக்கு தேவையான battery cells உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், Volkswagen நிறுவனத்தின் முக்கிய வாகன உற்பத்தி ஆலைகள் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளிலும் Mexicoவிலும் உள்ளதால், Ontarioவில் தயாரிக்கப்படும் batteries நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என தொழில்துறை ஆய்வாளர் Grieg Mordue தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மின்சார வாகனங்களை நோக்கிய உலகளாவிய மாற்றம் நீண்டகாலமாக தொடரும் நிலையில், தற்போதைய தாமதங்கள் தற்காலிகமானவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

