கியூபெக் மாகாணத்தில் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயது இளையோர் காணாமல் போகும் சம்பவங்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணாமல் போகும் சம்பவங்களில் பெரும்பாலானவை, பெற்றோருடன் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போவதனாலேயே நிகழ்கின்றன எனவும் தெரியவந்துள்ளது.
வீட்டை விட்டு வெளியேறும் இந்த சிறுவர்கள், கடத்தல் கும்பல்களினாலும் பாலியல் சுரண்டல் வலையமைப்புகளினாலும் மிக எளிதாக இலக்கு வைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
பொலிஸாரின் புதிய புள்ளிவிபரங்களின்படி, கியூபெக் மாகாணத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 7,398ஆகப் பதிவாகியுள்ளது. அதாவது, கியூபெக் மாகாணத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 20 பேர் காணாமல் போகும் அவலநிலை நிலவுகிறது.
சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடுவதற்கான மூலக் காரணங்களைக் கண்டறிந்து, ஆரம்பக்கட்டத்திலேயே அதனைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுத் திட்டங்களை, கியூபெக் மாகாண அரசு பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.


