தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு 20 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் இரு சீனப்பிரஜைகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இன்று (11) மரண தண்டனை விதித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமான ‘எராவான்’ வழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 120 பேர் காயமடைந்ததுடன், 20 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஐவர் சீனப் பெருநிலப்பரப்பையும் இருவர் ஹொங்கொங்கையும் சேர்ந்தவர்களாவர்.
திட்டமிட்டு மேற்கொண்ட குண்டுவெடிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தேக நபர்கள் இருவரும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான சாட்சிகளிடம் ஆதாரங்களைச் சேகரிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த வழக்கு தீர்ப்பை எட்டுவதற்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


