மொன்றியலின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் முக்கிய பங்காற்றி வரும் Montréal Metro தனது 60ஆவது ஆண்டு நிறைவை நெருங்கியுள்ள நிலையில், Metro கட்டமைப்பை பராமரிப்பதற்கும் நவீனப்படுத்துவதற்கும் அதிக முதலீடுகள் தேவை என Société de transport de Montréal — STM தெரிவித்துள்ளது.
மொன்றியல் Metro சேவை 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்த Metro வலையமைப்பு 78 கிலோமீட்டர் நீளமான நிலத்தடி பாதைகளைக் கொண்டுள்ளது.
STM பொது முகாமையாளர் Marie-Claude Léonard கூறுகையில், Metro அமைப்பின் சொத்துக்கள் மற்றும் கட்டமைப்புகளை தொடர்ந்து பராமரிப்பதற்கு கணிசமான முதலீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
Metro தொடர்பான மொத்த சொத்து மதிப்பு சுமார் 50 பில்லியன் டொலர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன், அதில் சுமார் 46 சதவீதம் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Metro தினமும் சுமார் 20 மணி நேரம் இயங்குவதுடன், இரவு நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் STM தெரிவித்துள்ளது.
இதனால், Metro சேவையின் நம்பகத்தன்மையை தொடர்ந்து பேணுவதற்கு நீண்டகால முதலீடு முக்கியம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

