கனடாவின் குடியேற்றக் கொள்கை அந்நாட்டை “சுய அழிவை நோக்கி” இட்டுச் செல்வதாகவும், போதிய பின்னணிப் பரிசோதனைகள் இன்றி மில்லியன் கணக்கான மக்களை நாட்டிற்குள் அனுமதிப்பதால் அங்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்குக் கனடிய மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
”ட்ரம்பின் இந்தக் கூற்று முற்றிலும் தவறானது, உண்மையற்றது மற்றும் போதிய புரிதலற்றது” என அவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடா எவ்வித முறையான பாதுகாப்புப் பரிசோதனைகளும் இன்றி மில்லியன் கணக்கான குடியேற்றவாசிகளை நாட்டிற்குள் அனுமதித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
இது விரைவில் கட்டுப்படுத்த முடியாத பெரும் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும், லிபரல் கட்சியின் இந்த நடவடிக்கைகள் மோசமான முடிவையே தரும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
குடியேற்றவாசிகள் முறையான பரிசோதனையின்றி அனுமதிக்கப்படுவதாக ட்ரம்ப் கூறியது முற்றிலும் பொய்யானது என்று, நீதி அமைச்சர் சீன் பிரேசர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவின் குடியேற்ற முறைமை மிகவும் பாதுகாப்பானது என்றும், அது குறித்த டிரம்பின் சித்தரிப்பு தவறானது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


