கியூபெக் மாகாணத்தில் ஆண்டிற்கு இருமுறை கடிகார நேரத்தை மாற்றியமைக்கும் தற்போதைய நடைமுறையை முழுமையாக ஒழித்து, நிலையான ஒரே நேர முறையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என, தற்போதைய ஆளும் கட்சியான ‘கோஅலிஷன் அவனீர் கியூபெக்’ (CAQ) கட்சி அறிவித்துள்ளது.
மாகாணத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்தக் கொள்கை அறிவிப்பு, தொடர்ச்சியாக நேர மாற்றத்தால் சிரமங்களை எதிர்கொள்ளும் கியூபெக் மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கடிகார நேரத்தை ஒரு மணிநேரம் முன்னோக்கியும் (Daylight Saving Time), நவம்பரில் ஒரு மணிநேரம் பின்னோக்கியும் (Standard Time) மாற்றுவது சர்வதேச அளவில் வழக்கத்தில் உள்ளது.
இருப்பினும், இந்த நேர மாற்றமானது மக்களின் தூக்கச் சுழற்சி, மன ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனைப் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட பொதுக் கருத்துக் கணிப்பில், பதிலளித்த 2,14,000 க்கும் மேற்பட்ட மக்களில் 91 சதவீதமானோர் இந்த நேர மாற்ற நடைமுறையை முற்றாகக் கைவிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் 72 சதவீதமானோர் ‘கோடைகால நேரத்தையே’ (Daylight Saving Time) ஆண்டு முழுவதும் நிலையாகப் பின்பற்றலாம் எனக் கோரியுள்ளனர்.
கியூபெக் நீதி அமைச்சர் சைமன் ஜோலின்-பாரெட் தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் விரிவான ஆலோசனைகளை நடத்தி வந்த நிலையில், தேர்தல் நேரத்தில் இக்கோரிக்கை முதன்மைப் பொருளாக மாறியுள்ளது.
ஏற்கனவே பிரிட்டிஷ் கொலம்பியா, சஸ்காட்செவன் மற்றும் மானிட்டோபா போன்ற மாகாணங்கள் பருவகால நேர மாற்றத்தைக் கைவிட்டு நிலையான நேரத்திற்கு மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


