கியூபெக் மாநிலத்தின் சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ‘டிஜிட்டல் சுகாதார சாதனை’ (DSN) திட்டம் ஆனது, பாதுகாப்பு உத்தரவாதங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சுமார் 3 பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் திட்டத்தின் மூலம், நோயாளிகளின் மருத்துவ விபரங்கள் அனைத்தும் ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
எதிர்வரும் மே மாதம் 9-ஆம் திகதி இந்தப் புதிய நடைமுறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட உள்ளது.
இருப்பினும், “மக்களின் மருத்துவத் தரவுகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்காவிட்டால், இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு நான் தயங்கமாட்டேன்” என்று கியூபெக் முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.
இந்தத் திட்டம் தொடர்பாக கியூபெக் மாநிலத்தின் எதிர்க்கட்சிகளும், மருத்துவத் துறை சார்ந்த தொழிற்சங்கங்களும் சில அச்சங்களை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக, அமெரிக்க மென்பொருள் நிறுவனத்தின் மூலம் தரவுகள் கையாளப்படுவதால், கியூபெக் மாநில மக்களின் அந்தரங்கத் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதாகக் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
