பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (05) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் பலமான பாராளுமன்ற நடவடிக்கைகளை கொண்டமைந்த பாராளுமன்றத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றும், அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது போலவே, நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பை வெளியிட்டு மக்கள் பக்கம் நாம் முன்நிற்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
நாடாளுமன்றக் குழுக்களின் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துரைத்து, அதற்கேற்ப எதிர்கால நடவடிக்கைகளை
எடுப்பதற்கும் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஜனவரி 29 ஆம் திகதியும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடி இதேபோன்ற கலந்துரையாடலொன்றை நடத்தியதோடு, இன்று இடம்பெற்ற கலந்துரையாடலும் இதன் ஓர் தொடர்ச்சியாகும்.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி பெரேரா, ரிஷாத் பதியுதீன்,
நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் ஸ்ரீதரன், ப.சத்தியலிங்கம்,
ஏ. காரியப்பர், வி. ராதாகிருஷ்ணன், அனுராதா ஜயரத்ன, டி.வி. சானகா, மற்றும் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.