பிரித்தானியாவின் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் கலிபோர்னியாவில் ஆறு ஆண்டுகள் வசித்த பின்னர் மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்பியுள்ளனர்.
நாட்டிற்குத் திரும்பியதன் பின்னர், இளவரசர் ஹரி வியாழக்கிழமை அன்று முதன்முறையாகப் பொதுநிகழ்வொன்றில் பங்கேற்றார்.
நிகழ்வில் பேசிய அவர், “மீண்டும் பிரித்தானிய மண்ணிற்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மன்னர் சார்லஸின் இளைய மகனான ஹரி, தனது மனைவி மேகன் மற்றும் குழந்தைகள் இளவரசர் ஆர்ச்சி (7), இளவரசி லிலிபெட் (5) ஆகியோருடன் கடந்த மாதம் பிரித்தானியாவுக்குக் குடிபெயர்ந்தார்.
இவர்களின் இந்த திடீர் முடிவு அவர்களின் நெருங்கிய குடும்பத்தினருக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
லண்டனில் நடைபெற்ற ‘இன்விக்டஸ் ஸ்பிரிட் விருதுகள்’ (Invictus Spirit Awards) தொடக்க விழாவில் இளவரசர் ஹரி கலந்துகொண்டார்.
காயமடைந்த மற்றும் நோயுற்ற இராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டியான ‘இன்விக்டஸ் கேம்ஸ்’ அமைப்பினை அவரே தோற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், ‘சேவ் தி சில்ட்ரன்’ (Save the Children) தொண்டு நிறுவனம் மற்றும் இம்பீரியல் கல்லூரி (Imperial College London) ஆகியவை இணைந்து நடத்திய, மோதல்களில் காயமடையும் குழந்தைகளின் பராமரிப்பை மேம்படுத்துவது தொடர்பான நிகழ்விலும் ஹரி உரையாற்றினார்.


