போர் நிறுத்த பேச்சுவார்த்தை முடங்கியுள்ளதால், தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு மத்திய காஸாவில் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் -காஸா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை பல மாதங்களாக முடங்கியுள்ள நிலையில், காஸாவில் இஸ்ரேல் தாக்குதலை விரிவுபடுத்தினால், அது பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் படைக்கு அழுத்தம் அளிக்கும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தித் தொடா்பாளா் அவிசெய் அட்ரே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில்,
‘டேய்ர்-அல்-பாலாவின் தென்மேற்கில் உள்ள இடங்களில் வசிப்பவா்கள், அங்கிருந்து வெளியேறி அல்-மவாசி பகுதிக்குச் செல்ல வேண்டும்’ என்று தெரிவித்ததாகவும் அல்-மவாசி பகுதியை பாதுகாப்பு மண்டலமாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க முயற்சிக்கும் பல சா்வதேச அமைப்புகள் டேய்ர்-அல்-பாலா பகுதியில்தான் உள்ளன. இந்நிலையில், அங்கிருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


