தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு 27 மாதங்களே ஆன நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பதிவில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்கள் தமக்கு அளித்த அன்புக்கு நன்றி தெரிவித்த விஜய், அந்த நன்றிக்கடனை செலுத்தும் நோக்கிலேயே 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 35 சதவீத வாக்குகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தை தனிப்பெரும் கட்சியாக மக்கள் உயர்த்தியதாகவும், மக்களின் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், அக்கட்சியின் தேர்தல் சின்னமான விசில் சின்னத்துக்கும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையுடன், மக்களுக்கான நன்றிக்கடன் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்த விஜய், கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

