மட்டக்களப்பு மாநகரசபையை தமிழரசுக் கட்சி பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மாநகரசபையின் 17ஆவது சபை அமர்வு இன்று முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், வீதிகள், கழிவகற்றல், வீதி மின்விளக்குகள், வடிகான்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக பலமுறை எடுத்துரைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.
குறிப்பாக, திருகோணமலை வீதியில் லங்காமாதா ஆலயத்திலிருந்து காத்தான்குடி வரையான பகுதியில் வீதி மின்விளக்குகள் இயங்காததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளையும் சுட்டிக்காட்டிய அவர்கள், இந்த வருடமும் வெள்ளம் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் மாநகர முதல்வரே ஏற்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், காணி ஆக்கிரமிப்பு மற்றும் வாகனத் தரிப்பிடக் கட்டணங்கள் தொடர்பிலும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மாநகரசபையை வழிநடத்த முடியாவிட்டால் தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்த அவர்கள், ஆறு மாதங்களில் மாநகரசபையை சிறந்த முறையில் கட்டியெழுப்புவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

