பிரபல ‘வேவின் பிளாக்’ (Wavin’ Flag) பாடலின் மூலம் உலகப் புகழ்பெற்ற கனடிய ராப் பாடகரும் திரைப்பட இயக்குநருமான கேனான் (K’naan) மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்திலிருந்தும் அவரை விடுதலை செய்து கியூபெக் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டில் கியூபெக் நகரில் உள்ள ஹோட்டல் அறையில் பெண் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, கேனான் மீது வழக்கு தொடரப்பட்டது.
கீனான் அப்தி வார்சமே (Keinan Abdi Warsame) என்ற இயற்பெயரைக் கொண்ட 48 வயதான பாடகர் கேனான், ஜூலை 2010 ஆம் ஆண்டில் கியூபெக் சிட்டியில் நடைபெற்ற ‘பெஸ்டிவல் டி எதே டி கியூபெக்’ (Festival d’été de Québec) இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அங்குள்ள ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அப்போது, இருபதுகளில் இருந்த கலைத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்த ஹோட்டல் அறையில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது கேனான் தன்னை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தியதாகப் பொலிஸில் புகார் அளித்திருந்தார்.
குறித்த பெண் 2022 ஆம் ஆண்டிலேயே மொன்றியல் பொலிஸாரிடம் உத்தியோகபூர்வமாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைகள் கியூபெக் பொலிஸாருக்கு மாற்றப்பட்டு, 2024 செப்டம்பரில் கேனான் மீது முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற விசாரணைகளின் போது சாட்சியமளித்த குற்றஞ்சாட்டிய பெண், சம்பவத்தன்று தாம் எதிர்த்த போதிலும் பாடகர் தன்னிடம் அத்துமீறியதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளைப் பாடகர் கேனான் முற்றாக மறுத்தார்.
இந்த நிலையில், வழக்கில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, கியூபெக் நீதிபதி கேனானை விடுதலை செய்து அறிவித்துள்ளார்.

