கியூபெக் மாகாண அரசின் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், மொன்றியல் மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து உள்கட்டமைப்புகள் சிதைந்து வருவதாக, போக்குவரத்து ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மொன்றியல் மெட்ரோவின் முதுகெலும்பாகக் கருதப்படும் கட்டமைப்புகள் தற்போது மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், இது பல தசாப்தங்களாகத் தொடரும் நிதிப் புறக்கணிப்பின்விளைவு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மத்திய அரசிடமிருந்து கியூபெக் மாகாணத்திற்கு வரவேண்டிய 5 பில்லியன் டொலர் போக்குவரத்து நிதி, ஒட்டாவாவிற்கும் கியூபெக் நகரத்திற்கும் இடையிலான அதிகாரப் போட்டியால் முடங்கிக் கிடப்பதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிளேஸ்-டெஸ்-ஆர்ட்ஸ் (Place-des-Arts) மெட்ரோ நிலையத்தில் மேற்கூரையின் கான்கிரீட் துண்டுகள் பெயர்ந்து விழுந்த சம்பவங்கள் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
மெட்ரோ அமைப்பைப் பராமரிக்க தற்போது 7 பில்லியன் டொலர் தேவைப்படுகிறது. இந்தப் பராமரிப்புச் செலவு 2030-ஆம் ஆண்டிற்குள் 9 பில்லியன் டொலர் என்ற அளவில் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் தற்போது புழக்கத்தில் இருக்கும் மிகவும் பழமையான ரயில்கள், மொன்றியல் மெட்ரோவில் இயக்கப்படுகின்றன என்ற விமர்சனமும்முன்வைக்கப்பட்டுள்ளது.இதேவேளை, மொன்றியல் மேயர் சொரையா மார்டினெஸ் பெர்ரடா ஏற்கனவே இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். புதிய திட்டங்களை உருவாக்குவதை விட, தற்போதுள்ள 60 ஆண்டுகால பழமையான மெட்ரோவைச் சீரமைப்பதே முதன்மையான பணி என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் போக்குவரத்து நெரிசலும், தொழில்நுட்பக் கோளாறுகளும் மொன்றியல் மக்களின் அன்றாட வாழ்வைப் பெரிதும் பாதித்து வருவதால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
