கியூபெக் மாகாண சட்டமன்றத்தில், முக்கிய சட்டமூலங்களை அவசர வழியில் விவாதங்களின்றி நிறைவேற்றுவதற்கு, மாகாண அரசாங்கத் தரப்பு மேற்கொண்ட முயற்சிகள், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் (Independent MNAs) எதிர்ப்பால் முடக்கப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாணத்தில் வரவிருக்கும் ஒக்டோபர் மாத பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, தங்களின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கிய சுமார் 19 அவசரச் சட்டமூலங்களை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் பிரீமியர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) தலைமையிலான அரசு தீவிரமாக இருந்தது.
கியூபெக் மாகாண சட்டமன்றத்தின் கோடைகால கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முக்கிய சட்டமூலங்களை விவாதங்களின்றி நிறைவேறுவதற்கு, மாகாண அரசாங்கத் தரப்பு இந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
கியூபெக் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரே சுயாதீன எம்பியான மைதே பிளான்ஷெட் வெசினா (Maïté Blanchette Vézina) உள்ளிட்ட சுயாதீன உறுப்பினர்கள், அரசாங்கம் விரிவான விவாதங்களின்றி சட்டங்களை அவசரமாக நிறைவேற்றக் கூடாது என, தங்களின் வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
சட்டமன்ற மரபுகளின்படி அவசரச் சட்டங்களை நிறைவேற்ற அவசியமான ‘அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவு’ (Unanimous Consent) கிடைக்காததால், பல முக்கிய சட்டமூலங்கள், சட்டமாக மாறுவதில் பெரும் இழுபறி நிலை தோன்றியுள்ளது.


