அமெரிக்க அரசாங்கத்தின் கொள்முதல் ஒப்பந்தங்களிலிருந்து கனேடிய நிறுவனங்களை நீக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த வணிகங்களையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார உதவித் திட்டங்களை கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது.
கனடாவின் பை கனேடியன் (Buy Canadian) கொள்கை மற்றும் அமெரிக்கப் பொருட்களுக்கு கனேடிய மத்திய அரசினால் விதிக்கப்பட்ட வரிகளுக்குப் பதிலடியாக, அமெரிக்கப் பொதுச் சேவைகள் நிர்வாகத்தின் (GSA) மூலம் மேற்கொள்ளப்படும் அரசாங்கக் கொள்முதல் பட்டியலில்
இருந்து கனேடியப் பொருட்களை முற்றாக நீக்க நடவடிக்கை எடுப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் சுமார் 50 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க அரசாங்கக் கொள்முதல் சந்தையிலிருந்து கனேடிய நிறுவனங்கள் விலக்கப்படும் சூழல் உருவானால், கியூபெக்கின் உற்பத்தி, விண்வெளி (Aerospace), இரும்பு மற்றும் பொறிமுறைத் துறை சார்ந்த ஏற்றுமதி
நிறுவனங்கள் பலத்த பின்னடைவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், கியூபெக் அரசின் உள்நாட்டு வாங்குதல் கொள்முதல் விதிகளில் உடனடி மாற்றங்களைச் செய்து கியூபெக் அரசு சிறப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கியூபெக் மாகாண அரசின் கொள்முதல் விதிகளில் கியூபெக் மற்றும் கனடாவில் இயங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கியூபெக் மாகாணத்தில் உள்ளூர் அளவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதம் வரை விலை முன்னுரிமை (preferential margin) வழங்கப்படும் என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
9.2 மில்லியன் டொலருக்கும் குறைந்த மதிப்பிலான அரசாங்க உள்கட்டமைப்பு மற்றும் பொது திட்டங்களுக்குக் குறைந்தபட்சம் 15 சதவீதப் பொருட்கள் உள்நாட்டிலிருந்தே பெறப்பட வேண்டும் என கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது.அமெரிக்க விநியோகஸ்தர்களைச் சார்ந்துள்ள கியூபெக் நிறுவனங்களுக்குப் பதிலாகக் கனடிய நிறுவனங்களை இணைக்கச் சிறப்புப் பணிக்குழு (Task Force) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் மற்றும் உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மூலம் மாகாணப் பொருளாதாரத்தில் சுமார் 1.5 பில்லியன் டொலர் கூடுதல் நிதி புழக்கத்தில் விடப்படும் என்று கியூபெக் மாகாண முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெஷெட் (Christine Fréchette)
தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்க வரிகளால் பாதிக்கப்படும் கியூபெக்கின் இறக்குமதியாளர்களுக்குக் கூட்டாட்சி அரசின் நிதியுதவித் திட்டங்கள் மூலம் கட்டண விலக்கு மற்றும் அவசரகாலக் கடன்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கியூபெக் அரசு மேற்கொண்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் உள்நாட்டுச் சந்தையைப் பலப்படுத்தினாலும், இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர் மேலும் மோசமடையும் என வர்த்தக நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

