மொண்ட்ரியல் நகரில் உள்ள செயிண்ட்-மிஷேல் (Saint-Michel) குடியிருப்புப் பகுதியில் அண்மைக்காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள், துப்பாக்கிச் சூடுகள் மற்றும் வீடமைப்புப் பிரச்சினைகள் காரணமாகத் தாங்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும், அப்பகுதியை விட்டு வெளியேறத் திட்டமிட்டு வருவதாகவும் அங்கு வாழும் பொதுமக்கள் பெரும் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, ஒரே வார இடைவெளியில் பெண்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள், பொலிஸ் அதிகாரி மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன.
செயிண்ட்-மிஷேல் பகுதியில் அண்மைக்காலமாக குடும்ப வன்முறைகள் மற்றும் வீதிகளில் நடக்கும் குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
அப்பகுதியில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் (SPVM) கூடுதல் அதிகாரிகளை நியமித்து ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் மக்கள் வாழும் இப்பகுதியில் போதிய மனநல ஆலோசனைகள், இளைஞர்களுக்கான சமூக நல்வாழ்வுத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பான வீடமைப்பு வசதிகள் இல்லாமையே, குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

