கியூபெக் மாகாணத்தின் மதச்சார்பற்ற சட்டமான Bill 21 தொடர்பான வழக்கின் மூன்றாவது நாள் விசாரணையில், ஆங்கிலேய உரிமைக் குழு ஒன்றின் வாதத்தைக் கனடா உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரிச்சர்ட் வாக்னர் கடுமையாகச் சாடியுள்ளார்.
அந்த அமைப்பு முன்வைத்த வாதங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை என அவர் குறிப்பிட்டுள்ளார். TALQ எனும் ஆங்கிலேய உரிமைக் குழுவின் சட்டத்தரணி, ஆங்கிலம் பேசும் சமூகத்தின் மதச்சார்பற்ற பார்வை வேறுபட்டது என்பதால், இந்த Bill 21 சட்டத்திலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதற்குப் பதிலளித்த நீதியரசர் ரிச்சர்ட் வாக்னர், பல்லினத்தன்மை மற்றும் பன்முகத்தன்மை என்பது ஆங்கிலம் பேசும் மக்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்றல்ல’ எனவும் ’பிரெஞ்சு மொழிப் பாடசாலைகளிலும் பல்வேறு மதப் பின்னணிகளைக் கொண்ட மாணவர்கள் பயில்கின்றனர்எனவும் தெரிவித்தார்.
கியூபெக் மாகாணத்தில் 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த Bill 21 சட்டத்தின்படி, ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் போன்ற அரச ஊழியர்கள் பணியில் இருக்கும்போது மத அடையாளங்களை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் நடுநிலைத்தன்மையைப் பேண இது அவசியம் என கியூபெக் அரசு கூறினாலும், இது சிறுபான்மையினரை வேலைவாய்ப்புகளில் இருந்து புறக்கணிப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.




