தமிழக நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) குறித்து தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த விமர்சனங்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தகவல் தொழில்நுட்பப் பிரிவு கடும் பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக த.வெ.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு வாங்கிய கடன்கள் எங்கே போனது என்றே தெரியாத வகையில் ஆட்சியை நடத்திவிட்டு, தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பின் ‘வேஸ்ட் வேஸ்ட்’ என அறிக்கை விடுவதாக மு.க. ஸ்டாலினை விமர்சித்துள்ளது.
மேலும், ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் கழித்தே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்ததை மறைத்துவிட்டு, தற்போது விரைந்து செயல்படும் முதலமைச்சர் போலப் போலியான தகவல்களைப் பரப்ப முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், ஓட்டுக்காக மட்டுமே அவசர அவசரமாக லேப்டாப் வழங்கிய திமுக அரசு, தற்போது புதிய அரசு லேப்டாப் வழங்குவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சுய சிந்தனையற்ற முறையில் அறிக்கை வெளியிட்டுள்ளதாகச் சாடியுள்ளது. மேலும், ‘மாற்றம் மாற்றம்’ என்பது ஊழல் மற்றும் லஞ்ச ஆட்சியில் இருந்து மக்கள் மீள்வதற்காக ஏற்பட்ட மாற்றமே தவிர வேறொன்றுமில்லை என்று த.வெ.க. தெளிவுபடுத்தியுள்ளது.
வெற்று விளம்பர மாடல் ஆட்சியாக இருந்த நிலையை மாற்றி, நேர்மையான மற்றும் மனசாட்சி உள்ள மக்களாட்சியை த.வெ.க. வழங்கி வருவதாகவும், திமுகவின் தவறான நிர்வாகத்தை மக்கள் மத்தியில் த.வெ.க. அம்பலப்படுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

