இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், குறித்த போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வட மாகாணப் பணிப்பாளர் K.D.C. காமினி, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
25 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில், பெண்களுக்கான போட்டிகள் பாசையூர் சென் அன்ரனீஸ் விளையாட்டு மைதானத்திலும், ஆண்களுக்கான போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன், விளையாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி H.W. சுஜிவ் உதயகுமார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.



