கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் வகையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க “கார்டி ஹோவ் சர்வதேசப் பாலம்” (Gordie Howe International Bridge) மூலம் கிடைக்கும் சுங்கவரி வருமானம், அதன் கட்டுமானக் கடன்கள் முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படும் வரை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இதனைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஒன்ராறியோவின் லண்டன் நகரில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே பிரதமர் மார்க் கார்னி இதனை உறுதிப்படுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கடுமையான விமர்சனங்கள் மற்றும் வாரக்கணக்கிலான இழுபறிகளுக்குப் பின்னர், வரும் இம்மாதம் 27ஆம் திகதி இப்பாலம் போக்குவரத்திற்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் எட்டப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் கனடாவுக்குப் பாரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்ற விமர்சனங்களை மறுத்த பிரதமர், இது “கனடாவுக்குக் கிடைத்த மிகச் சிறந்த ஒப்பந்தம்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்ராறியோவின் வின்சர் (Windsor) மற்றும் மிச்சிகனின் டெட்ராய்ட் (Detroit) நகரங்களை இணைக்கும் இப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த ஜூன் மாதமே நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

