கியூபெக் மாகாணத்தின் அனைத்துச் சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் ‘ரெசிலியன்ஸ் மொண்ட்ரியால்’ (Resilience Montreal) அமைப்பின் புதிய நிரந்தர நல்வாழ்வு மையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மொண்ட்ரியல் நகரில் வீடற்ற மற்றும் வாழ்வாதார அற்ற நிலையில் உள்ள பழங்குடியின (Indigenous) மக்களுக்கு உதவும் நோக்கிலேயே, இந்த நல்வாழ்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மொண்ட்ரியலின் கேபோட் சதுக்கத்திற்கு (Cabot Square) மிக அருகில் அமைந்துள்ள 780 அத்துவாரே அவென்யூவில் (780 Atwater Avenue) இந்த நல்வாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது.
வீடற்ற மக்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் சலவை (Laundry) வசதிகளுடன், அவர்களின் தனிப்பட்ட ரகசியத் தன்மையைப் பேணும் வகையில் மருத்துவ, சட்ட மற்றும் நிதி உதவிகளுக்கான பிரத்யேக ஆலோசனை அறைகள் முதலானவை இந்த கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கியூபெக்கில் உள்ள பொதுச் சேவை அமைப்புகளில் பழங்குடியின மக்கள் உதவி தேடிச் செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான பாகுபாடுகளையும் ஆபத்துகளையும் இந்த மையம் பெருமளவு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


