கியூபெக் மாகாணத்தின் துரோயிஸ்-ரிவியர்ஸ் நகரில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மற்றும் கலாச்சார மையத்தின் மீது அதிகாலையில் அடையாளம் தெரியாத நபரால் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தின் முகப்புப் பகுதி ஜன்னல்கள் முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலையில் ஒரு நபர் கால்நடையாக வந்து மசூதியை நோக்கிக் கற்களை எறிந்துவிட்டுத் தப்பியோடியது தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலானது தற்செயலாக நடந்த ஒன்று அல்ல என்றும், கடந்த சில வாரங்களாக உள்ளூர் இஸ்லாமியச் சமூகத்திற்கு எதிராக விடுக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரத்தின் தொடர்ச்சியே இது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனடா முஸ்லீம் கூட்டமைப்பு (Canadian Muslim Forum – CMF) இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
“உடைக்கப்பட்டது வெறும் ஜன்னல் கண்ணாடிகள் மட்டுமே என்றாலும், இதன் பின்னணியில் உள்ள நோக்கம் மிகவும் ஆபத்தானது.” என இதன் தலைவர் சாமர் மஜ்சூப் (Samer Majzoub) கருத்துத் தெரிவித்துள்ளார்.


