கியூபெக்கில் புதிய மொழிச்சட்டக் கட்டுப்பாடு அமலுக்கு வருமிடத்து, ஆங்கில வழி தொழிற்கல்வி மற்றும் முதியோர் கல்வி நிலையங்கள் தங்களின் ஒட்டுமொத்த மாணவர் தொகையில், 70 முதல் 75 சதவீதம் வரையான மாணவர்களை உடனடியாக இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் எண்ணிக்கை இவ்வளவு பாரிய அளவில் வீழ்ச்சியடையும் போது, மாகாண அரசால் ஆங்கிலக் கல்விச் சபைகளுக்கு வழங்கப்படும் கல்வி மானியங்கள் பெருமளவில் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கியூபெக் மாகாணத்தில் உள்ள ஆங்கிலக் கல்விச் சபைகள் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால், பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள், வாகன மெக்கானிக்குகள் மற்றும் சுகாதாரத் துறைப் பணியாளர்களை உருவாக்கும் பல முக்கிய தொழிற்கல்விப் பாடநெறிகள் முற்றாக முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொழிற்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ளவர்கள் என்ற நிலையில், கியூபெக் மாகாணம் முன்னிறுத்தும் மொழி-கலாசாரச் சூழலுக்கு அவர்கள் முற்றிலும் புதியவர்களாகவே உள்ளனர்.
அவர்கள் மாகாண அரசு வழங்கும் பிரெஞ்சு மொழிக் கற்றல் வகுப்புகளுக்காகக் காத்திருக்கும் அதேவேளையில், விரைவாக வேலைவாய்ப்பைப் பெற்று, பொருளாதார ரீதியாக நிலைபெறவே இத்தகைய தொழிற்கல்விகளைத் தேர்ந்தெடுக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்ட அமுலாக்கமானது, தொழிற்கல்வி பெற விடாமல் அவர்களை தடுத்தால், அவர்கள் வேலைவாய்ப்பின்றி வீடுகளில் முடங்கும் சூழலே ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
