நோட்ரே-டேம் கிழக்கு வீதியில் (Notre-Dame Street East) அமைந்துள்ள வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் (Homeless Encampments) பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது என, மொண்ட்ரியல் மாநகர மேயர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
மொண்ட்ரியல் மாநகரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை சர்வதேச ரீதியில் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் ‘யு.சி.ஐ உலக வீதி மிதிவண்டி சாம்பியன்ஷிப்’ தொடரை நடத்தத் தயாராகி வருகிறது.
75-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட சர்வதேச வீராங்கனைகளும் வீரர்களும், சுமார் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகளும் மொண்ட்ரியல் மாநகருக்கு வருகை தரவுள்ளனர்.
இந்தச் சூழலில், நகரின் அழகைக் கூட்டுவதற்காக அல்லது பந்தயப் பாதைகளைச் சீரமைப்பதற்காக, நோட்ரே-டேம் பகுதியில் பல மாதங்களாகத் தங்கியிருக்கும் வீடற்ற விளிம்புநிலை மக்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை என, பத்திரிகையாளர் சந்திப்பில் மேயர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சர்வதேசப் போட்டிகளை முன்னிட்டு வீடற்றோரை அப்புறப்படுத்துவது உலகளவில் பல பெருநகரங்களில் வழக்கமாக உள்ள போதிலும், மொண்ட்ரியால் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.
மொண்ட்ரியலில் உள்ள அவசரக் கால இரவு தங்குமிடங்கள் (Emergency Shelters) ஏற்கனவே தங்களின் முழுக்கொள்ளளவையும் தாண்டி இயங்கி வருகின்றன.
இந்நிலையில், மாற்று உறைவிடங்களை முறைப்படி வழங்காமல் கூடாரங்களை அகற்றுவது மனித உரிமை மீறலாகும் எனப் பொதுநல அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


