சர்வதேச சுற்றுலா கப்பல் ஒன்றில் பரவிய உயிர்க்கொல்லி ‘ஹான்டா வைரஸ்’ (Hantavirus) தொற்று காரணமாக, கியூபெக்கைச் சேர்ந்த கப்பல்பயணி ஒருவர் தற்போது முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த MV Hondius என்ற சுற்றுலா கப்பலில் ஹான்டா வைரஸ் பரவியதில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கப்பலில் பயணம் செய்துவிட்டு கியூபெக் திரும்பிய நபர் ஒருவருக்குத் தொற்று இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் கருதப்பட்டது.
இந்தநிலையில், அந்தப் பயணி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் நேற்று தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் அந்தப் பயணிக்கு நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும், பாதுகாப்பு கருதி அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இதேபோல ஒன்டாரியோவைச் சேர்ந்த இருவர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தக் கப்பலில் பயணித்த ஒரு முதியவர் மாரடைப்பு போன்ற அறிகுறிகளுடன் உயிரிழந்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து அவரது மனைவியும், மற்றொரு பயணியும் உயிரிழந்தனர்.
ஆய்வகச் சோதனையில் அவர்களுக்கு ‘ஹான்டா வைரஸ்’ இருந்தது உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
