ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களுக்கு இடையே இயங்கி வந்த மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் செயற்பாடுகளை பொலிஸார் முறியடித்துள்ளனர்.
இதில் மொன்றியலைச் சேர்ந்த 8 பேர் உட்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘புராஜெக்ட் ரெட்லைன்‘ (Project Redline) என்ற பெயரில் ஒன்டாரியோ மாகாண பொலிஸாரும் (OPP), கியூபெக் மாகாண பொலிஸாரும் (SQ) இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் 4.1 மில்லியன் டொலர் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று இது குறித்து வெளியான தகவலின்படி, மொன்றியல் மற்றும் கார்ன்வால் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 20 கிலோ ஃபெண்டானில் (Fentanyl), 14 கிலோ கோகோயின் மற்றும் 80,000 போலி மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த ரகசிய விசாரணையில், நான்கு வெவ்வேறு கடத்தல் கும்பல்கள் கண்டறியப்பட்டன.
கடந்த ஏப்ரல் 16-ஆம் திகதி மொன்றியலில் நான்கு இடங்களிலும், கார்ன்வாலில் மூன்று இடங்களிலும் ஒரே நேரத்தில் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தியிருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.


