அமெரிக்காவின் வரி விதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள உருக்கு மற்றும் அலுமினியத் தொழில்துறையினருக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 1.5 பில்லியன் டொலர் நிதியுதவியை கியூபெக் தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
இருப்பினும், நீண்டகால வர்த்தகப் போரைச் சமாளிக்க இந்தத் தொகை போதுமானதாக இருக்காது என்றும் அவை எச்சரித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 50% கூடுதல் வரியால் (Tariffs) கனடிய உலோக ஏற்றுமதி முடங்கியுள்ள நிலையில், மத்திய அரசு 1.5 பில்லியன் டொலர் அவசர உதவித் திட்டத்தை அறிவித்தது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ‘கியூபெக் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம்’ (MEQ), இந்த நிதியுதவி தற்காலிகமாகத் தொழிற்சாலைகள் மூடப்படுவதைத் தவிர்க்க உதவும் என்றாலும், அமெரிக்காவுடனான மோதல்போக்கு நீடித்தால் கூடுதல் நிதியுதவி தேவைப்படும் எனக் கூறியுள்ளது.
கனடாவின் ஒட்டுமொத்த அலுமினிய உற்பத்தியில் கியூபெக் மாகாணமே முன்னணியில் உள்ளது.
குறிப்பாக ‘சாகுனே-லாக்-செயிண்ட்-ஜீன்’ (Saguenay–Lac-Saint-Jean) போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்தத் தொழிலையே நம்பியுள்ளன.
இதனால், அமெரிக்கா தனது வரி விதிப்பைத் திரும்பப் பெறாதவரை, மத்திய அரசும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை மேலும் அதிகரிக்க வேண்டும் என கியூபெக் வர்த்தக சபைகள் வலியுறுத்தி வருகின்றன.
