கியூபெக் மாநிலத்தின் சி.டி.என்-என்.டி.ஜி (CDN-NDG) பகுதியில் புதிய வாகன நிறுத்துமிடக் கட்டண மீட்டர்களை (Parking Meters) நிறுவும் திட்டத்திற்குப் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனையடுத்து அந்தத் திட்டத்தின் செயற்பாடுகளை, கணிசமாகக் குறைப்பதாக மொன்றியல் மாநகர சபை அறிவித்துள்ளது. முன்னதாக, ஷெர்ப்ரூக் மேற்கு வீதி (Sherbrooke Street West) மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 440-க்கும் மேற்பட்ட புதிய கட்டண மீட்டர்களை நிறுவத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்தத் திட்டத்தினால் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும், குடியிருப்புப் பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாகும் என்றும் மக்கள் போர்க்கொடி தூக்கினர்.இதனையடுத்து, தற்போது இந்தத் திட்டத்தின் செயற்பாடுகள் பாதியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 250 இடங்களுக்கு மட்டுமென மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, டெக்காரி (Décarie) வீதிக்கு மேற்கே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் எவ்விதக் கட்டண மீட்டர்களும் நிறுவப்பட மாட்டாது. அதேபோல், கிராண்ட் (Grand Blvd) மற்றும் பீக்கன்ஸ்ஃபீல்ட் (Beaconsfield) வீதிகளுக்கு இடைப்பட்ட ஷெர்ப்ரூக் வீதிப் பகுதியிலும் வாகனங்களை இலவசமாகவே நிறுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகப் பகுதிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதைத் தடுத்து, வாடிக்கையாளர்களுக்குச் சுலபமாக இடம் கிடைப்பதை உறுதி செய்யவே, இந்தத் திட்டம் எஞ்சிய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
