இந்தியக் குடிமக்கள் யாரும் ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று, இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஈரான் மற்றும் இந்தியாவுக்கு இடையே ஒரு சில விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் வான்வெளிப் பாதுகாப்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், விமான மார்க்கமாகவோ அல்லது தரை மார்க்கமாகவோ ஈரானுக்குப் பயணம் செய்வதை இந்தியர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் தெஹ்ரான் இடையே சில வணிக ரீதியான விமானங்கள் கடந்த வாரம் முதல் மீண்டும் இயங்கத் தொடங்கின. இருப்பினும், வான்வெளியில் எந்த நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பதால், இந்த விமானப் பயணம் பாதுகாப்பானது அல்ல என்று இந்தியா கருதுகிறது.
தற்போது ஈரானில் தங்கியுள்ள சுமார் 4,000 இந்தியர்கள், அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வான்வழிப் பயணத்தை விட, அங்கீகரிக்கப்பட்ட தரை வழி எல்லைகள் (Land Borders) வழியாக வெளியேறுவதே பாதுகாப்பானது எனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்காக, ஈரானில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்துடன் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்பில் இருக்குமாறு, அங்கு வாழும் இந்தியக் குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

