தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஐந்து கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்துத் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபநாட்களாக மதுரை, கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு போதைப்பொருள் புழக்கமும் மதுப் பயன்பாடுமே முதன்மை காரணமாக விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் பெரும் அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார.
தற்போதைய அரசு போதைப்பொருட்களை ஓரளவு கட்டுப்படுத்தியிருந்தாலும், இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும், உடனடியாக இதை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தவறினால் சமூகம் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
மேலும், டாஸ்மாக் வருவாயைப் பெருக்குவதற்காக ஆன்லைன் புக்கிங் செயலி மற்றும் தனியாருக்கு விற்பனை அனுமதி போன்ற திட்டங்களை அரசு முன்னெடுப்பது சட்டம்-ஒழுங்கை மேலும் சீர்குலைக்கும் எனத் தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவியதாலும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததாலுமே பொதுமக்கள் த.வெ.க. தலைவர் விஜயை ஆதரித்து அவருக்கு வெற்றியைப் பரிசளித்தனர் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
எனவே, முதலமைச்சர் விஜய் தனக்குக் கீழ் இயங்கும் காவல் துறையை முடுக்கிவிட்டு, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் போதைப்பொருள் ஒழிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

