கியூபெக் அரசினால் வாங்கப்பட்ட விமானங்கள் அந்த மாகாண முதல்வருக்காக வாங்கப்பட்டவை அல்ல என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒண்டாரியோ மாகாண அரசு அந்த மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்டின் பயன்பாட்டுக்காக 28.9 மில்லியன் டொலர் பெறுமதியான தனிப்பட்ட சொகுசு விமானத்தை வாங்கியிருந்தது.
இந்த சொகுசு விமானக் கொள்வனவானது சமூகத்தின் பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் எதிர்க்கட்சிகளிடமிருந்தும் பாரிய எதிர்ப்பைப் பெற்றது.
இந்த நிலையில், கியூபெக் மாகாண அரசும் இவ்வாறான விமானங்களை வாங்கியுள்ளதாகக் கூறி, தனக்காக சொகுசு விமானம் வாங்கப்பட்டதை, ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் நியாயப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், கியூபெக் அரசு வாங்கிய விமானங்கள் அந்த மாகாண முதலமைச்சருக்காக அல்ல என்ற தகவலும் மாறாகப் பின்தங்கிய பகுதிகளில் உள்ள நோயாளிகளை அவசரமாக அழைத்துச் செல்லும் ‘மருத்துவ விமானச் சேவைக்காக’ (Medical Evacuation) வாங்கப்பட்டவை என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
இதனையடுத்து மக்களின் குரலுக்கு தாம் மதிப்பளிப்பதாகவும் அந்த விமானத்தை விரைவாக விற்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தற்போது தெரிவித்துள்ளார்.
