கொரோனா பெருந்தொற்றின் போது மொன்றியலில் உள்ள தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட 68 உயிரிழப்புகளுக்குத் தகுந்த நீதி கோரித் தொடரப்பட்ட ‘கூட்டு நட்டஈடு’ (Class-action) வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு, கியூபெக் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மொன்றியல்- வடக்கு பகுதியில் அமைந்துள்ள ‘ரெசிடென்ஸ் ஏஞ்சலிகா’ (Résidence Angelica) என்ற தனியார் முதியோர் இல்லத்தில், 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவலின் போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த தனியார் முதியோர் இல்லத்தின் நிர்வாகச் சீர்கேட்டினால், தனது 95 வயது தாயை இழந்த அன்டோனியோ கபோபியான்கோ (Antonio Capobianco) என்பவர் இந்த வழக்கைத் தலைமை தாங்கி முன்னெடுத்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதியான முதியவர்களை, தொற்று இல்லாதவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு மாற்றியமைத்தமை மற்றும் வைரஸ் பாதிப்புக்குள்ளான ஊழியர்களைத் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தியமை போன்ற பாரிய குற்றச்சாட்டுகள் நிர்வாகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளன.
கியூபெக் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதியின் மூலம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 26 ஆம் திகதி வரை அந்த இல்லத்தில் தங்கியிருந்த அனைத்து முதியவர்களும் நட்டஈடு கோர முடியும் எனத் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட முதியவர்களின் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் பராமரிப்பாளர்கள் அனைவரும் இந்த வழக்கில் இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
