கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரே லிபரல் கட்சியின் தற்போதைய தலைவராகவும் பதவி வகிக்கும் சுழலில், லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றிபெற்றார். இதையடுத்து, கனடாவின் 24-வது பிரதமராகவும் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், பதவியேற்பு நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஆளுநர் ஜெனரல் மேரி சைமன் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது. முன்னதாக கனடாவின் பிரதமராகவுள்ள ஐஸ்டின் ட்ரூடோ, முறைப்படி ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்கவுள்ளார். இதனை அடுத்து கனடாவின் 24-ஆவது பிரதமராக மார்க் கார்னி நாளை (மார்ச் 14) பதவி ஏற்கவுள்ளார்.
இந்நிகழ்வு ரிடோ மண்டபத்தில் (Rideau Hall) இடம்பெறவுள்ளது மார்க் கார்னி மற்றும் புதிய அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்பு ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை பதவி விலகுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதவி விலகும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து பொறுப்பேற்கும் புதிய லிபரல் தலைவர், மாற்றம் “தடையற்றதாகவும் விரைவாகவும் இருக்கும்” என்று உறுதியளித்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை பிரதமர் பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்வார், இதன் மூலம் அவரது அமைச்சரவை கலைக்கப்படும். பின்னர் மார்க் கார்னி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் ஆளுநர் ஜெனரலின் அதிகாரப்பூர்வ இல்லமான ரிடோ ஹாலில் பதவியேற்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற கார்னி, “அமெரிக்கா தரப்பு கனடாவுக்கு உரிய மரியாதையை அளிக்கும் வரையில் அவர்களது நடவடிக்கைகளைப் பின்பற்றி, அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மார்க் கார்னி பேசியதாவது, “கனடா நாட்டு மக்களின் நீர், நிலம் மற்றும் வளங்களை அமெரிக்கா விரும்புகிறது. ஒருவேளை அவர்கள் இதில் வெற்றி பெற்றுவிட்டால், நமது வாழ்க்கை முறையையே அவர்கள் அழித்துவிடுவார்கள். கனடா ஒரு போதும் எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் அமெரிக்காவின் பகுதி ஆகாது. வாழ்க்கையின் மகிழ்ச்சி, கலாச்சாரம் மற்றும் பிரஞ்ச் மொழி ஆகியவை நமது அடையாளத்தின் ஒரு பகுதியாகும். அதை நாம் பாதுகாக்க வேண்டும்; அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திற்கும் அதை நாம் வர்த்தகம் செய்யமாட்டோம். டொனால்ட் டிரம்ப் எடுத்துச் செல்வதை விட, கனடா மக்கள் தங்களுக்குள் அதிகமாக கொடுப்பார்கள். இதற்கு அசாதாரண முயற்சிகள் தேவைப்படும். இது வழக்கம் போல் நடக்கும் வர்த்தகம் போல் இருக்காது. நாம் முன்பு கற்பனை செய்து பார்க்காத விஷயங்களை, சாத்தியமில்லை என்று நாம் நினைக்கும் வேகத்தில் செய்ய வேண்டியிருக்கும். ஒவ்வொரு கனடா மக்களும் பயனடையும் வகையில் பொது நன்மைக்காக அதைச் செய்வோம்” என்று தெரிவித்தார்.
கனடாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைப்பட்ட காலம் வரை மார்க் கார்னி கனடா பிரதமராக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.