கியூபெக் மாகாணத்தில் மதச்சார்பின்மையை வலுப்படுத்துவதாகக் கூறி கொண்டுவரப்பட்ட மசோதா கடந்த வியாழக்கிழமை சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டம் மதச் சுதந்திரத்தைப் பறிப்பதாகக் கூறி, கனேடிய சிவில் உரிமைக் கழகம் (CCLA) மற்றும் கனேடிய முஸ்லிம்களின் தேசிய சபை (NCCM) ஆகிய அமைப்புகள் மாகாண அரசுக்கு எதிராகச் சட்டப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள மசோதா (Bill 21) சட்டத்தை விடவும் இந்த புதிய சட்டம் விரிவான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. அரசு நிதி உதவி பெறும் குழந்தைக் காப்பக ஆசிரியர்கள் இனி ஹிஜாப், சிலுவை போன்ற மத அடையாளங்களை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீதிகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் கூட்டாகப் பிரார்த்தனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலங்கள் அல்லது சமய நிகழ்வுகளை நடத்த வேண்டுமானால், இனி அந்தந்த நகர சபைகளிடம் விசேட அனுமதி பெற வேண்டும் எனும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கியூபெக் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் (CEGEPs) உள்ள தொழுகை அறைகள் மற்றும் பிரார்த்தனை கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கியூபெக் அரசு, கியூபெக் மாகாணத்தின் தனித்துவமான கலாசாரத்தைப் பாதுகாக்கவும், அரசு நடுநிலை வகிக்கவும் இந்தச் சட்டம் அவசியம் என வாதிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
