உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற முக்கிய சந்திப்பில், உக்ரைனுக்கு மேலதிகமாக 2.5 பில்லியன் கனடிய டொலர்கள் நிதி உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, கனடாவின் இந்த ஆதரவு உக்ரைனுக்குப் பெரும் பலத்தை அளித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கிவ் (Kyiv) மீது ரஷ்யா நடத்திய மிக மோசமான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் நடைபெற்றது.
மேலும், சுமார் 1.5 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான உக்ரைனின் கடன் தவணைகளைச் செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் மூலம் போரால் சிதைந்த கட்டிடங்களை மீண்டும் கட்ட $1.3 பில்லியன் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
கனடாவின் இந்த உத்தரவாதத்தால், சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் மேலும் $10 பில்லியன் நிதியை உக்ரைன் திரட்ட முடியும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


