கியூபெக் மாகாணத்திற்கு வரும் வெளிநாட்டு மாணவர்களை, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் மாணவர்களை, இலக்கு வைத்து இடம்பெறும் மோசடி தொடர்பில், அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறான மோசடி செய்வோரின் வலைப்பின்னல்கள் குறித்து, கியூபெக் ஊழல் தடுப்புப் பிரிவான யூ.பி.ஏ.சி (Unité permanente anticorruption – UPAC) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மாணவர்களை குறிவைத்து நடக்கும் இந்த மோசடிகள் குறித்த தகவல்கள் வெளியானதை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக இந்த குற்றவியல் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச மாணவர்களையும், கியூபெக்கின் பல்கலைக்கழகங்களையும் குறிவைத்து நடைபெறும் போலியான திட்டங்கள் மற்றும் போலி ஆவணங்கள் தயாரிப்பது குறித்து தங்கள் அமைப்புக்குத் தெரியும் என்பதை, கியூபெக் ஊழல் தடுப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் மாத்யூ கலா அர்னோ (Mathieu Galarneau) குறிப்பிட்டுள்ளார்.
மோசடிக்கு ஆளானதாக நம்பும் எவரும் கியூபெக் ஊழல் தடுப்புப் பிரிவினை, இணையவழியில் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தேவைப்பட்டால் சர்வதேச காவல்துறைப் படைகளுடன் ஒத்துழைக்கும் திறனும் இந்த கியூபெக் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
