டொராண்டோவின் வடக்கு யார்க் (North York) பகுதியில் உள்ள குடியிருப்புகளில், யூத மதத்தின் புனித அடையாளமாகக் கருதப்படும் மெசுசா (Mezuzah) எனும் வழிபாட்டுச் சுருள்கள் திருடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் தினமான நேற்று இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே மாதத்தில் இது போன்ற சம்பவம் இரண்டாவது தடவை நடைபெற்றிருப்பதால், இதனை ஒரு வெறுப்புக் குற்றம்(Hate Crime) என, வகைப்படுத்தி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பழமை வாய்ந்த இந்த மதச் சின்னங்கள் வீடுகளின் நிலைக்கதவுகளில் இருந்து பலவந்தமாகப் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.
நேற்று மதியம் 12:30 மணியளவில், ஃபின்ச் அவென்யூ ஈஸ்ட் (FinchAve E) மற்றும் பேவியூ அவென்யூ (Bayview Ave) சந்திப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்தப் புகார்கள் பதிவாகின. நான்கு வெவ்வேறு வீடுகளில் இருந்த புனிதச் சின்னங்கள் திருடப்பட்டுள்ளன.
இதில் ஒரு வீட்டின் உரிமையாளர் 'ஹோலோகாஸ்ட்' (Holocaust) எனும் நாஜி இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே டிசம்பர் மாதத் தொடக்கத்தில், பாத்தர்ஸ்ட் மற்றும் ஸ்டீல்ஸ் (Bathurst & Steeles) பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சின்னங்கள் இதுபோலத் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


