மொன்றியல் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் சயாஸ்போரா (Sayaspora) அமைப்பு தனது 10-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
ஆப்பிரிக்க வம்சாவளி இளம் பெண்களின் உரிமைகளுக்காகவும், ஊடகங்களில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்திற்காகவும் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று 30,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட உலகளாவிய இயக்கமாக வளர்ந்துள்ளது.
ஊடகங்களில் தங்களைப் பற்றிய செய்திகளும், பார்வைகளும் புறக்கணிக்கப்படுவதைத் தவிர்க்கவே இந்தத் தளம் உருவாக்கப்பட்டதாக அதன் நிறுவனர் ஜமிலா டூரே (Djamilla Toure) தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பு ஒரு சிறிய வலைப்பதிவாக ஆரம்பிக்கப்பட்டு, இன்று பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. சயாசேஃப் (Sayasafe) போன்ற திட்டங்கள் மூலம் இளம் பெண்களுக்கு டிஜிட்டல் தளங்களிலும், நகரங்களிலும் பாதுகாப்பாக இருப்பது குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்கப் பெண்கள் கனடாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் எளிதாக நுழைவதற்கும், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்கும் இந்த அமைப்பு பயிற்சிப் பட்டறைகளை (Workshops) நடத்துகிறது.
டயஸ்போரா ஸ்பீக்கிங் (Diaspora Speaking) என்ற ஆண்டு விழா மூலம்ஆப்பிரிக்கப் பெண்களின் சாதனைகள் உலகிற்கு அடையாளப்படுத்தப்படுகின்றன.
ஆரம்பத்தில் ஐந்து பெண்களால் தொடங்கப்பட்ட இந்த முயற்சிக்கு, தற்போது மொன்றியல் மாநகராட்சி மற்றும் கனடா மத்திய அரசு (Canadian Heritage) ஆகியவை நிதி உதவி மற்றும் ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

