நாட்டின் பல்வேறு பூர்வ குடி சமூகங்களுக்குச் சொந்தமான 200க்கும் மேற்பட்ட முக்கிய கலாசாரப் பொருட்கள், ரோமில் உள்ள வத்திகான் அருங்காட்சியகத்திலிருந்து கியூபெக்கின் காட்டினோவில் உள்ள கனேடிய வரலாற்று அருங்காட்சியகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வத்திகானின் மிகப் பெரிய இனவரைவியல் (Ethnographic) சேகரிப்பின் ஒரு பகுதியாக இந்தப் பொருட்கள் இருந்தன.
தற்போது, நல்லிணக்கத்தை நோக்கிய வரலாற்று நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்த கலாசாரப் பொருட்கள் கனடாவிற்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளன.
இந்தத் தொகுதியில் ஃபர்ஸ்ட் நேஷன்ஸ், இனூயிட் மற்றும் மேட்டிஸ் சமூகங்களின் காயாக் படகுகள், சடங்கு உடைகள், காலணிகள் மற்றும் சிலைகள் போன்ற பலதரப்பட்ட பொருட்கள் உள்ளடங்குகின்றன.
இவற்றுள் பெரும்பாலான பொருட்கள் 1925 ஆம் ஆண்டு வத்திகான் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுவதற்காக 1920களின் முற்பகுதியில் சேகரிக்கப்பட்டன.
கனேடிய வரலாற்று அருங்காட்சியகம் (CMH) தற்போது இந்தப் பொருட்களின் பொறுப்பாளராகச் செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
