உலகளாவிய வர்த்தக சீர்குலைவுகளின் மத்தியில், கியூபெக் மாகாண அரசு, வியட்நாமுடனான தனது உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.
வியட்நாமுடன் விரிவான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில், கியூபெக் தலைவர்கள் தங்கள் உறுதியை வெளிப்படுத்தியுள்ளனர்.
கனடாவின் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான சந்தைகளை பன்முகப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தகரீதியான முரண் நிலையில், அமெரிக்க சந்தையைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் கனடாவின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவும் இது அமைந்துள்ளது.
கனடாவுக்கான வியட்நாம் தூதுவர் பாம் வின் குவாங் தலைமையிலான வியட்நாமிய தூதரகக் குழுவினருக்கும் கியூபெக் மாகாணத் தலைவர்களுக்கும் இடையில் அண்மையில் இது குறித்த சந்திப்புகள் நிகழ்ந்தன.
அச்சந்திப்புகளின் போது, வியட்நாமுடன் விரிவான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு கியூபெக் தலைவர்கள் தங்கள் உறுதியை வெளிப்படுத்தினர்.
மொண்ட்ரீயல் துறைமுகத்திற்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி கடல் போக்குவரத்து வழித்தடத்தை நிறுவுவதன் முக்கியத்துவம் இச்சந்திப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த கடல் வழித்தடத்தை நிறுவுவதன் மூலம், கடல்வழியாக பொருட்களைக் கொண்டு செய்வதற்கான பயணச் செலவையும் கடற்பயணத்துக்கான காலப் பகுதியையும் கணிசமாகக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் மிகவும் வினைத்திறனான பொருளாதாரப் பிராந்தியங்களுள் ஒன்றாகவுள்ள கியூபெக்கின், சிறப்பான முன்னெடுப்பாக இது நோக்கப்படுகின்றது.