கியூபெக் மாகாண அரசு, அம்மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய இடங்களின் விபரங்கள் அடங்கிய புதிய வரைபடத்தை வெளியிடவுள்ளது.
இதன்படி, கியூபெக் மாகாணத்தின் குடிமக்களுள் இரண்டு சதவீதமானோர் இந்த வெள்ளப்பெருக்கு அபாயப் பிரதேசங்களில் வாழ்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அபாயப்பிரதேசங்களில் நிலங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ளவர்கள் குறித்த வரைபடம் வெளியாகுமிடத்து, பாதிப்புக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புடைய நில உரிமையாளர்கள், மாகாணத்தின் சுற்றுச்சூழல் அமைச்சரிடம், புதிய வரைபடத்தை வெளியிட முன்னர் நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரியுள்ளனர்.
மேலும், குறித்த வரைபடமானது தயாரிக்கப்பட்ட முறையையும் அவர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.
கியூபெக் மாகாணத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட வெள்ளத்தடுப்புக் கட்டமைப்புகள் அந்த வரைபடத்தில் சுட்டிக்காட்டப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கியூபெக் மாகாணத்தில் வெள்ளத்தடுப்புப் பொறிமுறையை அம்மாகாண அரசு தற்போது நவீனப்படுத்தி வருவதாக, கியூபெக் சுற்றுச்சூழல் அமைச்சின் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.