டொரண்டோ நகரில் உள்ள தோர்ன் கிளஃப் பார்க் (Thorncliffe Park) பகுதியில், இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்களை இணைக்கும் சுவர்களுக்குள் இன்சுலேஷன் (Insulation) எரிந்து கொண்டிருப்பதால், தீயணைப்பு வீரர்கள் கடந்த 24 மணி நேரத்துக்கும் மேலாக மிகக் கடுமையான சவாலை எதிர்கொண்டு போராடி வருகின்றனர்.
இரண்டு கட்டிடங்களுக்கிடையில் உள்ள சுவரின் இடைவெளியில் இன்சுலேஷன் பொருள் மெதுவாக எரிந்து கொண்டிருப்பதுதான் தீயை அணைப்பதில் உள்ள பிரதான சவாலாகும்.
இந்த மெதுவான எரிதல் காரணமாக, சுவர்களுக்குள் அதிக அளவு புகை மற்றும் கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide – CO) வாயு உருவாகிறது.
ஒரு கட்டத்தில் Five-alarm எனப்படும் ஐந்து-எச்சரிக்கை ஒலிநிலையை எட்டிய இந்தத் தீ விபத்து, நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களை இடம்பெயர வைத்துள்ளது.
டொரண்டோ தீயணைப்புத் துறைத் தலைவர் ஜிம் ஜெஸ்ஸப் (Jim Jessop), இந்தச் சம்பவத்தை சமீப ஆண்டுகளில் டொரண்டோ கண்டிராத மிகவும் சிக்கலான தீ விபத்துகளில் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த தீவிபத்தினூடாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
