கியூபெக் மாகாணம் முழுவதும் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்கள், பல நகரங்களில் பெரிய அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.
மொன்றியல் வாக்காளர்கள் தமது நகரத்திற்கு புதிய மேயரைத் தேர்ந்தெடுத்த அதேவேளை, கியூபெக் நகரத்தின் மக்கள் மீண்டும் தங்கள்
பழைய மேயருக்கே வலுவான ஆணையை வழங்கியுள்ளனர்.
மொன்ட்ரியல் நகரத்தின் முன்னாள் மேயர் வலேரி ப்ளாண்டின் ’ப்ரோஜெட் மொன்ட்ரியால் கட்சி’யின் எட்டு ஆண்டுகால இடதுசாரி நிர்வாகத்திற்குப்
பிறகு, மொன்றியல் மக்கள் புதிய மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மையவாதக் கட்சியான என்சம்பிள் மொன்ட்ரியால் (Ensemble Montréal) கட்சியின் தலைவரான சோரயா மார்ட்டினெஸ் ஃபெரடா, மொன்ட்ரியல்
நகரத்தின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மொன்றியல் நகரத் தேர்தலில் செல்லுபடியான மொத்த வாக்குகளில், மார்ட்டினெஸ் ஃபெரடா சுமார் 43 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அவர், 36 சதவீத வாக்குகளைப் பெற்ற ப்ரோஜெட் மொன்ட்ரியல் கட்சியின் தலைவரான லூக் ராபுயினை தோற்கடித்தார்.
கியூபெக் நகரத்தின் மக்கள் தமது தற்போதைய மேயரான ப்ரூனோ மார்சண்ட்டுக்கு இம்முறை 49 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை
அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
