கியூபெக் மாகாணத்தில் வீசி வரும் கடும் உறைபனி மழை (Freezing Rain) மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக, மொன்றியால் உள்ளிட்ட தெற்குப்
பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்தத் தீவிர வானிலை காரணமாகப் போக்குவரத்து முடங்கியுள்ளதோடு, சுமார் 25,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ள ஆரஞ்சு எச்சரிக்கையின்படி (Orange Alert), இன்று மாலைக்குள் சுமார் 15 மி.மீ. தடிமனான பனிப்படுகையானது, வீதிகளையும் மின் கம்பிகளையும் மூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்றினால் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால், மொன்றியல் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
மொன்றியலின் ரயில் சேவை பனிப்படுகை படிந்ததன் காரணமாகப் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மொன்றியல்-ட்ரூடோ விமான நிலையத்தில் (YUL) சுமார் 12 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என, மொன்றியல் மேயர் சொராயா மார்டினெஸ் ஃபெர்ராடா எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று இரவு முதல் மழை நின்று பனிப்பொழிவு (Snow) தொடங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் வெப்பநிலை மிகக் கடுமையாகக் குறைந்து -38°C வரை செல்லக்கூடும் என்பதால், மக்கள் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

