மொன்றியல் (Montreal) நகருக்கு மேற்கே அமைந்துள்ள கோட்டோ-டு-லக் (Coteau-du-Lac) பிராந்தியத்தில், கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்து மூழ்கியதில் காரில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட ஊடகத் தகவல்களின்படி, காரைச் செலுத்திய சாரதி 18 வயதுடைய ஓர் இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸாரின் துரத்தலின் போது, தப்பியோட முயன்ற போதே அந்த கார் விபத்தை எதிர்கொண்டுள்ளது.
மொன்றியலில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டோ-டு-லக் பிராந்தியத்தின் டெலிஸ்லே ஆற்றுப் பகுதியில் (Delisle River) இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாட்டின் சட்டத்தின்படி, பொலிஸ் விசாரணைகள் அல்லது துரத்தல்களின்போது பொதுமக்களுக்கோ அல்லது சந்தேக நபர்களுக்கோ மரணமோ
அல்லது கடுமையான காயங்களோ ஏற்பட்டால், அந்த வழக்கின் புலனாய்வுப் பொறுப்பு உடனடியாக சுயாதீன கண்காணிப்பு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது.
அதற்கமைய பொலிஸ் தரப்பு முன்னெடுத்த நடவடிக்கையின் போது இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதால், கியூபெக் மாகாணத்தின் சுயாதீன பொலிஸ் புலனாய்வு அமைப்பானபீரோ டெஸ் என்கெட்ஸ் இண்டிபெண்டென்டெஸ் (Bureau des enquêtes indépendantes – BEI) இந்தச் சம்பவம் குறித்துப் பாரிய விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்தத் துரத்தல் சம்பவத்தின்போது கியூபெக் மாகாண பொலிஸார் தங்களின் அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டார்களா அல்லது சாரதியின் அதிவேகம் மட்டுமே இந்த விபத்திற்குக் காரணமா என்பது குறித்து சுயாதீன பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


