தேசிய மாவீரன் பண்டார வன்னியன், முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றி வெற்றி பெற்ற 222 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பெயர்ப்பலகை திரைநீக்கம்
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த முல்லைத்தீவு கோட்டை, அந்நியப் படையெடுப்புகளை எதிர்த்து வீரமுடன் போராடிய தேசிய வீரர் பண்டார வன்னியன் தலைமையிலான படைகளால் 1803 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இந்நிகழ்வு இடம்பெற்று 222 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்றய தினம் மாவட்ட செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மேற்படி பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) திரு.சி.குணபாலன் , மேலதிக மாவட்ட செயலாளர் ( காணி ) திரு.ஜெயகாந், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. சற்குணேஸ்வரன்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ஜி.ஜெயரஞ்சினி உட்பட மாவட்ட செயலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலக வளாகத்தில் தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படும் முல்லைத்தீவு கோட்டைஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டை ஆகும். 1715 ஆம் ஆண்டில் மரத்தாலும் மரவேலிகளாலும் இக்கோட்டை நிறுவப்பட்டது. 1721 ஆம் ஆண்டில் நாற்பக்கல் வடிவில் இக்கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டது.
பின்னர். பிரித்தானியரால் இக்கோட்டை 1795 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டது. 25 ஆகஸ்ட் 1803 இல் பண்டார வன்னியனால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டு இடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
