வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயம் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட பதினான்கு வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்றையதினம் வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பதினாறுக்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றியிருந்தன.
ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் செட்டிக்குளம் முதலியார்குளம் அரசினர் தமிழ்கழவன் பாடசாலையும் மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயமும் மோதின இதன்போது 1:0 என்ற கோல் அடிப்படையில் மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயம் வெற்றிபெற்றது.
பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் கனகராயன்குளம் மகாவித்தியாலயமும் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயமும் மோதின இதில் கனகராயன்குளம் மகாவித்தியாலயம் வெற்றிபெற்றது.
இம்முறை ஆண் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவிலும் வவுனியா வடக்கு கல்வி வலய பாடசாலைகள் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிக்கு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் அமலன், வவுனியா வடக்கு கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ரவிச்சந்திரன், தெற்கு கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் யூட்பறதமாறன், யங்ஸரார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பாபு, கழக உபதலைவர் துசிந்திரா மற்றும் வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.