ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள நீண்டகாலப் பராமரிப்பு இல்லங்களில் (long-term care homes) வசிக்கும் முதியவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக நான்கு மணிநேரம் நேரடிப் பராமரிப்பு வழங்குவதற்கான இலக்கை அரசாங்கம் கிட்டத்தட்ட எட்டியுள்ளது.
2021-ல் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், பணியாளர்கள் பற்றாக்குறையால் முழுமையாக எட்டப்படவில்லை என்று அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாண அரசானது, முதியோர்களுக்குத் தரமான பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, செவிலியர்கள், தனிப்பட்ட ஆதரவுப் பணியாளர்கள் (PSWs), பிசியோதெரபிஸ்டுகள் போன்ற பிற சுகாதார நிபுணர்கள் அளிக்கும் பராமரிப்பு நேரத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த இலக்கை நிர்ணயித்தது.
அரசின் சமீபத்திய அறிக்கையின்படி, மாகாணம் முழுவதும் உள்ள நீண்டகாலப் பராமரிப்பு இல்லங்களில் சராசரியாக மூன்று மணிநேரம் 49 நிமிடங்கள் நேரடிப் பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட நான்கு மணிநேர இலக்கில் 95.5% ஆகும்.
ஒன்ராறியோ மாகாண அரசினால் செய்யப்பட்ட இந்தச் சாதனையை, ஒன்ராறியோவின் இலாப நோக்கற்ற இல்லங்களின் சங்கமான AdvantAge Ontario-வின் தலைமை நிர்வாக அதிகாரி லிசா லெவின் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
