2022 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று பெல்லே ப்ளைன் அருகே காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 வயது ரியான் புக்கரின் மரணம் தொடர்பான விசாரணைகள் சஸ்காட்செவானில் ஆரம்பமாகியுள்ளன.
ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நெடுஞ்சாலை 1 இல் நீடித்த ஒரு பதட்டமான சூழ்நிலைக்குப் பிறகு, புக்கரின் மரணத்திற்கான உண்மைகளைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க பரிந்துரைகளை வழங்குவதே இந்த விசாரணையின் முக்கிய நோக்கமாகும்.
மூஸ் ஜாவ் சூப்பர்ஸ்டோர் வாகன நிறுத்துமிடத்தில் தனது காரில் அமர்ந்து ஒருவர் அச்சுறுத்தி வருவதாக, காவல்துறைக்கு, கிடைத்த தகவலுக்குப் பிறகே, புக்கரின் மரணம் நிகழ்ந்தது.
பின்னர், அந்த வாகன நிறுத்துமிடத்திலிருந்து வெளியேறிய புக்கர், பெல்லே ப்ளைன் அருகே ஒரு பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கு காவல்துறையினருடன் அவர் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஆறு மணி நேர மோதலுக்குப் பிறகு, புக்கர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்த விசாரணையில், புக்கருடன் ஆறு வருடங்கள் உறவில் இருந்த கைட்லின் ஹோஃபர் சாட்சியமளித்தார்.
புக்கர் தங்களைச் சந்திப்பதற்கு சற்று முன்னரே மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் இறப்பதற்கு “ஒரு வருடத்திற்கும் மேலாக” மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டதாகவும் ஹோஃபர் தெரிவித்தார்.
புக்கரின் தந்தை பாரி நோசால் சாட்சியமளித்தபோது, தனது மகன் போதைக்கு அடிமையாகியிருந்ததை அல்லது மனநலப் பிரச்சினைகளுடன் போராடி வந்ததை தான் அறிந்திருக்கவில்லை என்று கூறினார்.
புக்கரின் மரணம் தொடர்பான விசாரணைகள் சஸ்காட்செவானில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.